உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் இந்தியாவிலும் பேரிழப்பு ஏற்பட்டுவிடாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அந்த வகையில் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உணவின்றி தவிப்பவர்களுக்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் அரிசி, மளிகை பொருள்களை வழங்கி வருகிறார்.
அதன்படி மலை கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்கள், திருநங்கைகள், ஏழைகள், உள்ளாட்சி பணியாளர்கள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு நிவாரண பொருள்களை அவர் வழங்கினார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக குடியேறிய ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் குமரி மாவட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்தாலும் தினசரி கூலி வேலைக்குச் சென்றுதான் தங்களது நாட்களை நகர்த்திவந்தனர்.
இச்சூழலில் மக்களவை உறுப்பினரிடம் ஈழத் தமிழர் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஈழத்தமிழர் அகதிகள் குடியிருப்பிலுள்ள சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான முகக்கவசங்கள், அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்களை வசந்தகுமார் சார்பில் காங்கிரஸ் மாநில ஓ.பி.சி பிரிவுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் வழங்கினார்.