கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் நாகர்கோவிலில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் அளித்த சொத்து மதிப்பு பட்டியலின்படி அவரது தற்போதைய சொத்து மதிப்பு 417 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 444 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அவரது மனைவி பெயரில் உள்ளவையும் அடங்கும்.
அவரின் அசையும் சொத்துக்கள் பட்டியலில் கையிருப்புத் தொகையாக 230 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாய் என காண்பிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி பெயரில் இரண்டு லட்சத்து 83 ஆயிரத்து 142 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.வங்கிகளில் வைப்புத்தொகை, பங்கு பத்திரங்களில், முதலீடு ஆகியவற்றில் 13 கோடியே 41 லட்சத்து 85 ஆயிரத்து 939 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாய நிலங்கள் உட்பட அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 187 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் வசந்தகுமாரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பாக 417 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 444 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு கடனாக 154 கோடியே 86 லட்சத்து 72 ஆயிரத்து 128 ரூபாய் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின்போது வசந்த குமாருக்கு ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 285 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 803 ரூபாய் என பதிவாகியிருந்தது. தற்போது இது 417 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 444 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 131 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 803 ரூபாய் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.