குமரி: 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வார்த்தையை இந்த மண்ணில் பிரசவித்த பெருமைக்குரிய அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க அடிகளார் ஆவார். இவர் வள்ளலார் எனவும் அழைக்கப்படுகிறார். அவர் கடலூர் மாவட்டத்தில், மருதூர் கிராமத்தில் 1823ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார்.
இளமையிலேயே அவருக்கு முருகன் மீது பற்றுதல் அதிகம். தெய்வப் பாடல்கள், பொது சிந்தனை, தத்துவப்பாடல்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர். 1867ஆம் ஆண்டில் வடலூரில் தரும சாலை தொடங்கி முதன்முதலில் தமிழ்நாட்டில் மூன்று வேலை இலவசமாக வருபவர்களுக்கு உணவு வழங்கியவர், ராமலிங்க அடிகளார் ஆவார்.
இறந்தவர்களை எரிக்கக்கூடாது; சமாதி வைத்தல் வேண்டும்; உயிர்களை கொல்லக்கூடாது; எல்லா உயிரும் நமக்கு உறவுகளே, அவற்றை துன்புறுத்தக்கூடாது என்ற ஏராளமான தத்துவ கொள்கைகளை இந்த உலகில் விதைத்தவர். சாதி சமய வேறுபாடுகளுக்கு எதிராக, தனது நிலைப்பாட்டால் அன்றைய சமுதாயத்தின் பழமைப்பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர், ராமலிங்க அடிகளார்.
இறையன்பர் உரையாசிரியர் சித்த மருத்துவர் என தன் திறமையால் பதினைந்து முகங்களைக் கொண்டவர், ராமலிங்க அடிகளார் அவருடைய பிறந்தநாள் வரும் ஐந்தாம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அவரது ஐந்தாவது தலைமுறை பேரனான உமாபதி இன்று(அக்.02) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வருகை தந்ததால் இன்று அவருடைய பிறந்தநாள் நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலார் பேரவை அமைப்பினர் கொண்டாடினர்.
மாநில வள்ளலார் பேரவைத்தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமையில் வள்ளலாரின் ஐந்தாவது தலைமுறை பேரன் உமாபதி முன்னிலையில் தீப விளக்குகள் ஏற்றி அருட்பெருஞ்ஜோதியின் பாடல்கள் பாடப்பட்டன.
இதையும் படிங்க: குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!