கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழாக்குடி, அருமநல்லூர், திருப்பதிசாரம், தேரூர், தேவகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கோல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, வயல்களில் மழை நீர் தேங்கி நின்ற காரணத்தால் வைக்கோலை விவசாயிகளால் தனியாகப் பிரித்து எடுக்க முடியவில்லை. இதனால் சாதாரண அறுவடையில் ஒரு ஏக்கருக்கு சுமார் ஐம்பது கட்டுகள் வைக்கோல் கிடைக்கும் நிலையில், தற்போது ஒரு வெறும் பத்து கட்டுகள் கூட பிரித்து எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. 40 கிலோ கொண்ட ஒரு கட்டு 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு உயர்ந்து கட்டு ஒன்று 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைக்கோல் விலை மேலும் உயரும் என்று வைக்கோல் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வைக்கோல் விலை திடிரென உயர்ந்துள்ளது உள்ளூர் வைக்கோல் வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், விலை தொடர்ந்து உயர்ந்துவருவது கால்நடை வளர்ப்போரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே கால்நடை வளர்ப்பவர்களுக்கு அரசு உதவிசெய்ய முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: குன்னூரில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி!