கன்னியாகுமரி: மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் மொபைல்போன் அழைப்பு மூலமாக அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக பரிசுப் பொருட்கள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்ப வைத்து 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த சைபர் கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பெண் அளித்தப் புகாரின் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த சதீஷ் குமார், அமான் கான் ஆகிய இரு இளைஞர்களை அதிரடியாக சைபர் க்ரைம் காவல் துறை கைது செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆன்லையின் மூலமாகவும் போன் அழைப்புகள் மூலமாகவும் பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மாவட்டத்தில் பல காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மொபைல் போன் அழைப்பு மூலமாக மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக சில பரிசு பொருட்கள் தருவதாகக் கூறி நம்ப வைத்து, சுங்கத்துறை கட்டணம் மற்றும் வருமானவரி கட்டணங்கள் கட்ட (customs clearance fees மற்றும் Income Tax) பணம் செலுத்த வேண்டும் எனப் பல்வேறு கட்டங்களாக 9,49,000/- ரூபாயை அடையாளம் தெரியாத சைபர் மோசடி நபர்கள் ஏமாற்றியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் அவர்களிடம் புகார் அளித்தார். இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்கணிப்பாளர் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் போலீசாரின் தீவிர விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் குமார்(23) மற்றும் அமான் கான் (19) என்பது தெரியவந்தது.
உடனே உத்தரப்பிரதேச மாநிலம் விரைந்த சைபர் கிரைம் போலீசார் எட்டாவா மாவட்டம் சென்று இரு குற்றவாளிகளையும் கைது செய்து குமரி மாவட்டம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து இது போன்ற குற்றச் சம்பவங்களில் அவர்கள் தமிழக அளவில் ஈடுபட்டு உள்ளனரா ? பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனரா? என்பது குறித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இதையும் படிங்க:ஷ்ரத்தா கொலை வழக்கில் ட்விஸ்ட்... டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான புதிய தகவல்