கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக செயல்பட்டுவருபவர் பிரசாந்த் வடநேரே. இவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்களிடமிருந்து துறை ரீதியாக சந்தேகமும் விளக்கமும் கேட்பதற்காக தனது அலுவலக மெயில் ஐடியை பயன்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சில அரசுத் துறை உயர் அலுவலர்களுக்கு துறை ரீதியாக சில தகவல்கள் கேட்டு ஆட்சியரின் மெயில் முகவரி போன்ற போலியான மெயில் ஐடி அனுப்பப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தகவல்களை அனுப்புவதாக எண்ணி சில அலுவலர்கள் முக்கியத் தகவல்களை அந்த போலி இ-மெயிலுக்கு அனுப்பியது தெரியவந்தது.
இதற்கிடையில் சில அரசு அலுவலர்கள், ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து அவரது நேர்முக உதவியாளரிடம், இவ்வாறு அனுப்பப்பட்ட மெயிலுக்கு பதில் அளிக்க வேண்டுமா அல்லது ஆட்சியரின் பழைய மெயிலுக்கு அனுப்ப வேண்டுமா என்று கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அப்படி எந்த மெயிலும் ஆட்சியரிடமிருந்து வரவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் ஏதோ சமூக விரோத கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதி நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் மெயில் ஐடி பயன்படுத்தும் ஐபி அட்ரஸ் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.