குமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே அமைந்துள்ள புதுவிளை கிராத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த புதிவிளை கிராமத்தில் படித்த வேலை பார்க்கும் இளைஞர்கள் பலர் வரனுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திருமண வரனுக்காக இளைஞர்கள் குறித்து விசாரிக்க வருபவர்களிடம் சிலர் மறைமுகமாக இளைஞர்கள் குறித்து அவதூறு கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதனால் பல இளைஞர்களுக்கு வரன் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.
இதிலும் உச்சக்கட்டமாக பெண் வீட்டிற்கே சென்று வாலிபர்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து அவதூறு பரப்பும் நபர்களின் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தனர். அதன்படி, முதற்கட்டமாக புதுவிளை பகுதியில் ஒரு மின்கம்பத்தில் விளம்பர பேனர் ஒன்றை வைத்தனர்.
அந்த பேனரில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் புதுவிளை இளைஞர்களுக்கு வரும் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி. மேலும் தங்கள் நற்பணி தொடருமாயின் சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர் புகைப்படம் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.
மேலும், திருமண வரன்களை தடுப்பதற்கு முன் கூட்டியே எங்களிடம் தகவல் தெரிவித்தால் வாகன வசதி செய்து தரப்படும் இப்படிக்கு திருமண வரன் தேடும் இளைஞர்கள் எனவும் அந்த பேனரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. திரைப்பட பாணியில் இளைஞர்களின் வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேனர் மூலம் இளைஞர்கள் கொடுத்த பதிலடி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.