திருச்சி மாவட்டம், தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (43). இவரது மனைவி பாரதி. இந்தத் தம்பதியர் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.
பல்வேறு கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, அதை நம்பி ஏராளமானவர்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்குப் பணத்தை கொடுக்காமல் கோடிக் கணக்கில் மோசடி செய்துவிட்டு, முத்துராமலிங்கம் குடும்பத்துடன் தலைமறைவானார்.
அவர் மீது திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர், கடந்த 2018இல் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து முத்துராமலிங்கத்திடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்கள் அவரது வீட்டை முற்றுக்கையிட்டு கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நேசமணி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். அவரிடம் கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ். பி. முத்துப்பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நாகர்கோவில் வந்து, முத்துராமலிங்கத்தை அழைத்து சென்றனர்.