கன்னியாகுமரி: நாகர்கோவில் வடசேரி பகுதியில் 'கனகமூலம் காய்கனிச் சந்தை' செயல்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் கனகமூலம் மகாராஜாவால் துவங்கப்பட்டதால், இந்த சந்தைக்கு 'கனகமூலம் காய்கனிச் சந்தை' எனப் பெயர் வந்தது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு, திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் மன்னர், விவசாயிகளின் நலனுக்காக இந்த இடத்தில் சந்தை அமைத்து, அதன் மூலம் காய்கனி மற்றும் பொருள்கள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்வதோடு, கேரளாவிற்கு காய் கனிகளை கொண்டு செல்லும் நோக்கத்தில் துவக்கப்பட்டது.
அன்றைய காலத்தில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட சந்தை பிற்காலத்தில் 300க்கும் மேற்பட்ட கடைகளுடன் மிகப்பெரிய அளவில் இயங்கி வந்தது. பின்னர் கனகமூலம் சந்தையில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் மிகப்பெரிய சங்கம் அமைத்து, வடசேரி அடுத்துள்ள ஒழுகினசேரி பகுதியில் 'அப்டா' என்ற பெயரில் மிக பிரமாண்டமான சந்தை ஒன்றை ஆரம்பித்து கனகமூலம் சந்தையில் இருந்து, அங்கு மாறினர்.
ஆனாலும், வடசேரி பகுதியிலுள்ள அரசர்காலத்து கனகமூலம் சந்தையை விட்டு, இடம் பெயராமல் சுமார் 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தற்போதும் வியாபாரம் செய்து வருகின்றனர். கனகமூலம் சந்தையில் இருக்கும் வியாபாரிகள் காய், கனி வகைகளை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸ் உதவியோடு காரில் கடத்திய பெற்றோர் - குமரியில் நடந்தது என்ன?
இந்த நிலையில் இந்தச் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, இதனை ஒட்டி அமைந்த வடசேரி பேருந்து நிலையத்தை 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இந்த சந்தையில் காலம் காலமாக இடுபொருட்களைக் கொண்டு, வந்த விவசாயிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று கடைகளை அடைத்து சந்தையில் முன்பகுதியில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் இந்த இடத்தில் பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுத்தால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மரம் நடும் இயக்கத்தை தொடங்கிய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர்!