மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தியாவைக் காப்போம் என்ற முழக்கத்தோடு போராட்டம் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் இன்று சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து 25க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. சமீப காலமாக தொழிலாளர்கள் நலச் சட்டங்களை முழுமையாக நீக்கியுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களைப் பன்னாட்டு முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்த நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். அதேபோல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலையிழந்து தவிக்கும் பிஎஸ்என்எல் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து விதமான பணியாளர்களுக்கும் 50 லட்ச ரூபாய் காப்பீடு வழங்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவைக் காரணம் காட்டி மூடி வைக்கப்பட்டுள்ள முந்திரி தொழிற்சாலை, மில்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னையைப் பேசி முடிக்க வேண்டும்” என்றனர்.