கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் வட பகுதி மாவட்டங்களில் மாண்டஸ் புயல் தொடர்பான எச்சரிக்கையால் கடலோரப் பகுதிகளில் காவல் துறையினரால் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தென் மாவட்டங்களில் எவ்வித எச்சரிக்கை அறிவிப்பும் இல்லாததால் கடற்கரை பகுதிகள் வழக்கம் போல் பரபரப்போடு காணப்படுகின்றன.
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி கடற்கரை மற்றும் பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்படுகின்றனர். கடல் அலையில் எவ்வித மாற்றமும் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படுவதோடு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
சாதாரணமாக கடல் சீற்றமோ கடல் உள்வாங்கினாலோ மட்டுமே படகு போக்குவரத்து நிறுத்தப்படும், கடலில் எந்த விதமான மாற்றமும் ஏற்படாததால் கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலாப் பயணிகளோடு இயல்பு நிலையில் காணப்படுகிறது. இதற்கிடையே கடல் உள்வாங்கியதாக வதந்தி பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை