கன்னியாகுமரி- கேரள எல்லைப்பகுதியில் படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் நேற்று இரவு காவல் பணியிலிருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஐந்து தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் குமரி மாவட்டம் முழுவதும் காவலர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வாகன தணிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இறந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினரை சந்திப்பதற்காக இன்று காலை தென் மண்டல காவல் துறை தலைவர் (ஐஜி) சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக காவல் துறை தலைவர் (டிஐஜி) பிரவீன் குமார் ஆகியோர் அவரின் வீட்டிற்குச் சென்றனர்.
காவல் உயர் அலுவலர்களைக் கண்டதும் வில்சனின் குடும்பத்தார் கதறி அழுதனர். அவர்களுக்கு சண்முக ராஜேஸ்வரன், பிரவீன் குமார் ஆகியோர் ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள வில்சனின் உடலைப் பார்ப்பதற்காக அவர்கள் சென்றனர்.
இதையும் படிங்க: உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடும் கொலையாளிகள்