நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார், செட்டிகுளம், மற்றும் முக்கிய ஜங்ஷன் சுற்றுப் பகுதிகளில் உள்ள கடைகளை, சாலை விரிவாக்கத்திற்காக இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், இடிக்கவுள்ள கடைகளில் சிவப்பு நிறத்தில் அளவு குறியீடுகள் இடப்பட்டுள்ளன.
மாநகராட்சியின் இச்செயலை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய டேவிட்சன், மாநகராட்சியின் இந்த முடிவால் காலம் காலமாக அப்பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் பாதிக்கப்படுவர்கள், என்றார்.
இதையடுத்து, மாநகராட்சியின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி நாகர்கோவில் மாநகர அனைத்து வியாபாரிகளின் சார்பாக முழு அடைப்பு போராட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வணிகர்களை பாதுகாக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.