உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட இயற்கை முறை சாறுகள், முட்டை, இறைச்சிகள் ஆகியவற்றை மக்கள் அதிக அளவில் உணவில் சேர்த்துவருகின்றனர்.
இந்நிலையில் உடும்புக் கறி சாப்பிட்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்றும் கரோனா தொற்று நோய் தாக்காது என்றும் கருதிய கன்னியாகுமரி மாவட்டம் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் ஆரல்வாய்மொழி தெற்கு மலைப் பகுதியில் உடும்பை வேட்டையாடி, அதனை மலை அடிவாரத்தில் வைத்து சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறையினர் ஆறு பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டனர். பின்னர், வனத் துறையினரைக் கண்ட அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இதில் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (19), கண்ணன் (20), பாலகிருஷ்ணன் (24) ஆகிய மூவரை வனத் துறையினர் துரத்திப் பிடித்து கைதுசெய்தனர். மேலும், தப்பியோடிய கணேஷ்குமார், சுடலை, மாதவன் ஆகியோரை வனத் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆறு மயில்கள் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை!