கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 16 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது தவிர 27 பேர் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த அம்பலக்கடையைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி, அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த 49 வயது இளைஞர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புத்தேரி பகுதியை சேர்ந்த 53 வயது மூதாட்டி ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
இவர்கள் மூவரும் கரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் இவர்களது ரத்தம், சளி மாதிரிகள் ஏற்கனவே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன. பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் இவர்கள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இவர்கள் மூவருமே கரோனா அறிகுறிகளுடன் மட்டுமே சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு உண்மை நிலை தெரியவரும் என்றும், பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க... கன்னியாகுமரியில் கரோனா கண்காணிப்பு தீவிரம்!