கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறப்பு பிரிவு காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையின்போது பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட புதிய வகை போதை பொருட்கள் சிக்கியது. இச்சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா, போதை ஊசி மருந்து விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்துள்ளார். இந்த தனிப்படையினர் இன்று(அக்.22) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட புதிய வகை போதை பொருட்கள் சிக்கின.
இதை பெங்களூரிலிருந்து கடத்திக்கொண்டு வந்து விற்பனை செய்த குலசேகரத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன்(29), வாத்தியார் விளையை சேர்ந்த பிரவீன்(26), அருமனையை அனிஷ்(29) ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து போதை பொருட்களை வாங்குவதற்காக வந்திருந்த, நாகர்கோவிலை சேர்ந்த பார்த்திபன்(22), கோகுல்(25), சரவணன்(27), கிரீஸ்(23), ஆலன்குமார்(22) ஆகியோரையும் காவல் துறையினர் பிடித்தனர்.
மேலும் போதைப் பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து, கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்படும் போதை பொருளான ஆஷிஷ் ஆயில் 130 கிராம், இதை உபயோகிக்க பயன்படும் ஊசி, ஓசிபி விர்ஜின் வேப்பர் பேப்பர், அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் காளீஸ்வரி வழக்குப்பதிவு செய்து கோகுல் கிருஷ்ணன், அனிஷ், பிரவீன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். போதைப்பொருள் வாங்குவதற்காக வந்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.