மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தமிழ்நாடு அரசை வற்புறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் போராட்டம் நடத்தும் நாகர்கோவிலை அடுத்த இளங்கடைப் பகுதியைச் சேர்ந்த ஒரு முகவரியிலிருந்து எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று சென்றுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி விருதுநகர், ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றபோது இந்த மிரட்டல் கடிதம் சென்னையில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குச் சென்றது.
அந்தக் கடிதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் விருதுநகர் வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குண்டுவீசி கொல்வோம் என்ற மிரட்டல் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தது. கடிதத்தில் ஜமால் ராபி ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மிரட்டல் கடிதம் குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலர்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் கோட்டார் காவல் துறையினர் நாகர்கோவில் இளங்கடைப் பகுதிக்குச் சென்று மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஜமால் ராபி என்ற பெயரில் அந்த முகவரியில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து முதலமைச்சருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்பதைக் கண்டுபிடிக்க தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதுதொடர்பாக கியூ பிரிவு காவல் துறையினரும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க... அந்தரங்க உறுப்பில் ரூ.8 கோடி மதிப்புள்ள கொக்கைன் கடத்தல் - பெண் கைது!