குமரி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான மலர் சந்தையாக தோவாளை மலர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூக்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதன் விளைவாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி நேற்று ரூ 300க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ, இன்று ரூ.600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ 600 க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ ரூ.900க்கும், ரூ 800 க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் ரூ.1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ரோஜா, தாமரை உள்ளிட்ட பல்வேறு மலர்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்வால் விற்பனை சரிந்துள்ளது.