கன்னியாகுமரி: புத்தளம் பேரூராட்சி அலுவலகத்தில் தெரு விளக்குகள் அமைப்பதற்கான நிதியில் வாங்கப்பட்ட 250 (டியூப் லைட்) குழல் விளக்குகளை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் 2 பேர் பேரூராட்சித்தலைவரின் பேரில் முறைகேடாக வெளியில் கொண்டுபோய் விற்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
நாகர்கோவில் அடுத்த புத்தளம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவராக திமுகவைச்சேர்ந்த சத்தியவதி உள்ளார். முன்னதாக, இவர் மீது வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்கூட புகார்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புத்தளம் பேரூராட்சிப்பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் வாங்கிய (டியூப் லைட்) குழல் விளக்குகளை தெரு விளக்குகளில் பொருத்த துப்புரவுப்பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளனர்.
அவர்களுள், இருவர் சுமார் 250-க்கும் மேற்பட்ட புதிய குழல் விளக்குகளை இருசக்கர வாகனம் ஒன்றில் சொத்தவிளை கடற்கரை சாலை வழியாக இன்று (ஆக.4) எடுத்துச்சென்றதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, பேரூராட்சித்தலைவர் சத்தியவதியும் EO ராஜேந்திரன் என்பவரும் இதனை விற்பனை செய்ய சொன்னதாகக் கூறிவிட்டு விளக்குகளை சாலை ஓரத்தில் வீசிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் முருகன் கூறும்போது, 'பேரூராட்சியில் அடிக்கடி குழல் விளக்குகள் வாங்கியதன் செலவு ஏராளமாக காட்டப்படுகிறது. இதில் அலுவலர்கள் உடந்தையுடன் ஒப்பந்தப்பணியாளர்கள், குழல் விளக்குகளை வெவ்வேறு இடங்களில் வைத்துவிட்டு அங்கிருந்து எடுத்துச்சென்று விற்பனை செய்கிறார்கள்’ எனக்கூறினார்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு புகார் அளித்ததன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருதாகவும் கூறினார். இவ்வாறு பேரூராட்சி அலுவலர்கள் உடந்தையுடன் பொதுமக்களுக்குப்பயன்படுத்த வேண்டிய குழல் விளக்குகள் கடத்தப்பட்டு வருவது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாய்மரப்படகுகள் மூலம் உலக சாதனை செய்த பாதுகாப்புக்குழும காவலர்கள்; முதலமைச்சர் வாழ்த்து