கன்னியாகுமரி அருகிலுள்ள முகிலன்குடியிருப்பில் ஊர் பொதுமக்கள் நடத்தி வரும் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் நள்ளிரவில் புகுந்த திருடர்கள், கோயில் கருவறையின் கதவை உடைத்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். மேலும் தங்க நகைகள் இருந்த லாக்கர் பெட்டியை உடைக்க முடியாததால் அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஊர் தலைவர் பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு ஒரு மணிக்கு நான்கு நபர்கள் கோயிலுக்குள் செல்வது பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை கன்னியாகுமரி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக ஒரு இளைஞர் இருசக்கரவாகனத்தில் வேகமாக வந்துள்ளார். அந்த இளைஞரை விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர்கள் தெற்கு சூரங்குடி அருகிலுள்ள அத்திக்கடை, சுடலைமாடன் கோயில் தெருவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (21)என்பதும் முகிலன் குடியிருப்பு கோயிலில் நகைகள் திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதேபோல் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று மாலை ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்காக வந்த கீரிவிளையைச் சேர்ந்த அரவிந்த் பிரியனிடம் (வயது 20) நடத்திய விசாரணையில் அரவிந்த் பிரியனும் இந்த திருட்டில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களுடன் இன்னும் இரண்டு பேருக்கு தொடர்புடையது தெரியவந்தது.
மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சாமியார் வேடம் அணிந்து திருடிய சிவா, அகில் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கோயிலில் திருடுபோன 6 கிராம் தங்க நகைகள் உள்பட 20 சவரன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் இந்த நபர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கோயில்களில் கைவரிசை காட்டியுள்ளதும், குறிப்பாக அம்மன் கோயில்களை மட்டுமே குறிவைத்து திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.