கன்னியாகுமரி: நாகர்கோவில் மேலராமன்புதூரை சேர்ந்தவர் அழகேஷ்வரன். இவரது மனைவி உதிராதேவி (32). இவர் வேலை தேடி வருவதை எப்படியே தெரிந்துகொண்டு உதிராதேவியின் மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு பேசிய நபர் தன்னை சி.பி.ஐ. அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும் பலருக்கும் வேலை வாங்கி கொடுத்து இருப்பதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய உதிராதேவி, தனக்கும் வேலை வாங்கி தருமாறு கூறியுள்ளார். அதற்கு பல லட்சம் ரூபாய் ஆகுமென்றும், முதற்கட்டமாக 60,000 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய உதிராதேவி உடனடியாக ஆன்லைன் மூலம் அந்த நபருக்கு 60,000 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
பிறகு தேவியின் வீட்டுக்கு வேலை தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி என்று கூறி, உதிராதேவியிடம் சான்றிதழ்கள் வாங்கி சரிபார்த்துவிட்டு வேலை தயாராக உள்ளது என கூறியுள்ளார். பின்னர் போட்டோ எடுக்க வேண்டும் என்றும், எனவே கழுத்தில் அணிந்துள்ள நகையை கழற்றி வையுங்கள் என்று அந்த வாலிபர் கூறி இருக்கிறார்.
அந்த வாலிபரின் பேச்சை நம்பிய உதிராதேவி தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி அங்குள்ள நாற்காலியில் வைத்துள்ளார். அப்போது தனக்கு தாகம் எடுப்பதாகவும், தண்ணீர் கொண்டு வரும்படியும் அந்த வாலிபர் கூறியதும், தேவி சமையல் அறைக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்து பார்த்தபோது தேவியின் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை காணவில்லை.
சி.பி.ஐ. அதிகாரி போல நடித்து அந்த வாலிபர் 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததோடு, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான நகைகள் மற்றும் செல்போனை வீட்டில் வந்தே திருடிச் சென்றதும் தான் ஏமாற்றபட்டதை குறித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நேசமணி நகர் போலீசார் வேலூர் சந்திரம்புதூர் பகுதியை சேர்ந்த அன்புகுமார் (27) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் காதலனுடன் லாங் டிரைவ்; சுமோவில் சடலமாக கிடந்த பெண்.. குமரியில் நடந்தது என்ன?