கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை டிஎஸ்பி அலுவலகம், அருமனை காவல் நிலையம் மற்றும் தனிப்படை காவல் துறையினருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், பனச்சமூடு பகுதியில் காரில் லட்சக்கணக்கில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் காரின் நிறம், பதிவு எண், தயாரிப்பு நிறுவனம் உள்பட அனைத்து தகவல்களையும் கூறியுள்ளார்.
தகவல் அடிப்படையில் தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன், அருமனை காவல் துறையினர் பனச்சமூடு பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தொலைபேசியில் அடையாளம் தெரியாத நபர் குறிப்பிட்ட அடையாளங்களுடன் ஒரு கார் வந்தது. உடனடியாக அந்தக் காரை மடக்கிப் பிடித்த காவல் துறையினர் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த நபரிடம் ஒரு கோடியே 55 லட்சத்துக்கும் மேல் கட்டுக் கட்டாக பணம் இருந்தது.
இதையடுத்து பணத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர், அந்த நபரை காருடன் அருமனை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்த நபர் தனது சொத்தை விற்றதாகவும், அதற்கான பதிவுமுடிந்து பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் கூறிய சார்-பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தனர். அப்போது சொத்து பதிவு நடந்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் போன் செய்து தகவல் கூறியவர், அந்தப் பணம் வைத்திருந்த நபரிடம் இருந்து சொத்தை வாங்கியவர் என்பது தெரியவந்தது.
பத்திர பதிவு முடிந்தவுடன் சம்பந்தப்பட்டவருக்கு நிலத்துக்கான பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் தான் கேட்டபடி நிலத்துக்கான விலையைக் குறைத்து கொடுக்காததால், ஹவாலா பணம் எனக் காவல் துறையினருக்கு பொய்யான தகவல் கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை எச்சரிக்க காவல் துறையினர் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவரை தேடி வீட்டுக்கு சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். இப்படியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் துறையினரை அலைக்கழித்த சம்பவம் அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.