கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைப்பெறுவதற்காக வருகின்றனர். குமரி மாவட்டம் மட்டுமல்ல நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் உடனடியாக அவசர சிகிச்சைக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப்பெற்று செல்கின்றனர்.
அந்த வகையில் நோயாளிகள் தங்கி சிகிச்சைப்பெறுவதற்கான கூடுதல் மருத்துவமனை கட்டடம் உள்ளது. இதில் மூன்றாவது தளத்திற்கு நோயாளிகள் செல்வதற்கு இரண்டு லிஃப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு லிஃப்ட் பழுதாகி, ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆறு பேர் அதில் சிக்கித்தவித்தனர்.
பின்னர் லிஃப்டின் கதவுகள் உடைக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர். இந்தச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குள் மீண்டும் இன்று மற்றொரு லிஃப்ட் பழுதாகி உள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட நோயாளிகள், பார்வையாளர்கள் என 8 பேர் சென்று கொண்டிருந்தபோது பழுதாகியது.
ஐந்து நிமிடங்களில் சரி செய்யப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டாலும் லிஃப்ட் அடிக்கடி பழுதாகி வரும் சம்பவம் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தான நிலையினை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கவலைத்தெரிவித்துள்ளனர்.
மேலும் 'சிறுபிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை மருத்துவமனைக்கு வந்து செல்வதால் அனைவருக்கும் லிஃப்டை இயக்கத்தெரியாது. எனவே, ஒரு லிஃப்ட் ஆபரேட்டர் கண்டிப்பாக நியமனம் செய்ய வேண்டும். இது போன்ற குறைபாடுகளில் சிக்கும்போது மூச்சுத்திணறி நோயாளி இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்' என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினுடைய நிர்வாக குறைபாடா அல்லது அரசின் குறைபாடா என்ற கேள்வியினையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு