கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே ஆனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கேல் டோனிக் (22). இவருக்கும் வாணிய குடியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது.
இதைனையடுத்து ஆல்டோ மைக்கேல் டோனிக் தனது காதலியான அந்த மாணவியை நாகர்கோவில் அருகேயுள்ள உலக்கை அருவி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு, ஆல்டோ மைக்கிள் டோனிகை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆல்டோ மைக்கேல் டோனிக் நண்பர்களான கோட்டார் பகுதியை சேர்ந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஸ்வாக் ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து காவல் துறையினர் அவர்கள் நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல் - போக்சோவில் 3 பேர் கைது!