கன்னியாகுமரி: முகிலன் குடியிருப்பு காலனியைச் சேர்ந்தவர் கோபால். இவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொலைந்து போன சொத்து பத்திரங்கள், பாஸ்போர்ட், சான்றிதழ்கள் நகல் வேண்டி விண்ணப்பிக்க வரும் நபர்களிடமிருந்து 5,000 முதல் 50,000 ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளார்.
மேலும் இவரே காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகியோரின் கையெழுத்துகளை போலியாக போட்டு சான்றிதழ்கள் கொடுத்து வந்துள்ளார். இது குறித்து இவர் மீது பல புகார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குச் சென்றுள்ளது. பின்னர் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டதில், இவர் பணம் பெற்றுக்கொண்டு போலி கையெழுத்திட்டு சான்றிதழ்கள் வழங்கியது தெரிய வந்துள்ளது.
எனவே தலைமைக்காவலர் கோபாலை பணியிடை நீக்கம் செய்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேறு ஒருவர் வாங்கிய லோனுக்கு ஆந்திர அமைச்சருக்கு கால் செய்து தொந்தரவு செய்த 4 பேர் கைது