மகாத்மா காந்தியடிகளின் மறைவிற்கு பின்னர் 1948 பிப்ரவரி 12ஆம் தேதி அவரது அஸ்தி கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்ட இடத்தில் 1956ஆம் ஆண்டு நினைவு மண்டபம் எழுப்பட்டது. இந்த மண்டபம் அமைந்து பல ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை சிலமுறை மட்டுமே பராமரிப்பு, வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்றுள்ளன.
மோசமான நிலையில் காந்தி மண்டபம்
இந்நிலையில், இன்று காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் வேளையில், அவரை மறந்தது போன்று நினைவு மண்டபத்தையும் மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும் அளவில் அந்த மண்டபம் மிக மோசமான நிலையில் உள்ளது.
விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கடற்கரை காற்று காரணமாக மண்டபத்தின் பல பகுதிகள் சிதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் இருக்கிறதா என்று கேள்வியெழும் நிலை வந்துவிடும் என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதை கவனத்தில்கொண்டு அரசு விரைந்து செயல்பட்டு மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.