கன்னியாகுமரியில் உயரமான கொடி கம்பத்தில் பெரிய அளவிலான தேசிய கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும் என்பது அம்மாவட்ட மக்களின் நீண்டநாள் ஆசையாக இருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் விஜயகுமார் எம்பி 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 148 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை நாட்டி அதில் தேசிய கொடியை பறக்கவிட திட்டம் தீட்டி அந்த திட்டத்தை மத்திய அரசின் பரீசலனைக்காக அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், இன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய பொது மேலாளர் ராகேஷ் குமார் சிங், விஜயகுமார் எம்பி உள்ளிட்ட பலரும் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். தேசிய கொடி கம்பம் அமையவுள்ள பகுதிகளை அளவை செய்த அலுவலர்கள் குழு இந்த ஆய்வு குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வழங்கிய பின் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து விஜயகுமார் எம்பி கூறுகையில், "தற்போது முன்பு குறிப்பிட்டதைவிட கொடி கம்பத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கொடி கம்பத்தை எல்லோரும் எளிதாக பார்க்க முடியும். இந்த கொடி கம்பம் இந்த பகுதி மக்களின் தேசிய உணர்வை தூண்டும் வகையிலும் அவர்களின் ஆசையின் படியும் அமைக்கப்படும். இரவு நேரங்களில் எப்போதும் இந்த கொடி கம்பத்தைச் சுற்றி மின்னொளி ஒளிரும்படியான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுபோல் கூடிய விரைவில் விமான நிலையத்திற்கான ஆய்வு பணியும் நடைபெறவுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:
நான் தான் பொம்மை பேசுறேன்" - விழிப்புணர்வு பாடம் நடத்தும் ஆசிரியர்