கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நாட்டின் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
மோட்டார் வாகனம் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பால் இதுவரை 1லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் வேலை வாய்ப்பின்மை பலமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற மத்திய அரசின் முடிவுகளாலும் மோசமான பொருளாதாரக் கொள்கைகளாலும் தொழில் நிறுவனங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வங்கிகளில் இருந்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனை திரும்ப பெற எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை பிரச்னையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் பரபரப்பையும் பதற்றத்தையும் மத்திய அரசு உருவாக்கிவருகிறது. மத்திய அரசு சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தப் பார்க்கிறது. இதனை எதிர்த்து நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும்" என்றார்.