சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இன்றுமுதல் அதிகாரப்பூர்வமாக படகு சேவை தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா பரவல் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக கன்னியாகுமரியில் படகு சேவை நிறுத்தப்பட்டது. அண்மையில் கன்னியாகுமரி வந்த முதலமைச்சர் பழனிசாமி, மீண்டும் கன்னியாகுமரியில் படகு சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி இன்று படகுசேவை தொடங்கியது. இதற்காக முதலமைச்சர் பழனிசாமி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். காலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்ட இரண்டு சொகுசுப் படகுகள் 92 அடி நீளம் வரை உள்ளது.
இதனைப் பயன்படுத்தி காலை சூரிய உதயமாகும் நேரத்தில் கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையிலும், மாலையில் சூரிய அஸ்தமன நேரத்தில் கன்னியாகுமரி முதல் மணக்குடி வரையிலும் படகு சேவையை நீட்டித்தும் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் கன்னியாகுமரிக்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்" எனக் கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க: நிவர் புயலை எதிர்கொள்ள ஆம்புலன்ஸ்கள் தயார் - விஜயபாஸ்கர்