கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டிவிளை உப்பளத்தின் கரைப்பகுதியில் கடந்த 4ஆம் தேதி எரிந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக தென்தாமரைகுளம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எரிக்கப்பட்டு கருகிய நிலையில் கிடந்ததால் உடலை அடையாளம் காணுவதில் சிக்கல் இருந்தது.
எரிந்த நிலையில் இருந்த ஆண் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது எரித்துக் கொலைசெய்யப்பட்டாரா? என்பதைக் கண்டறிய தடயவியல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை நடந்தது.
இந்நிலையில், இறந்து கிடந்தவர் சாமிதோப்பு செட்டிவிளையைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி தயனேஸ் (74) என்பது தெரியவந்துள்ளது.
எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
தயனேஸின் மனைவி மரியகிரேஸ். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அந்தோணிராஜன் என்பவரை தத்தெடுத்து வளர்த்தனர். அந்தோணிராஜன் தற்போது குடும்பத்துடன் தெங்கம்புதூரில் வசித்துவருவதால் தயனேஸும் அவரது மனைவியும் செட்டிவிளையில் தனியாக வசித்துவந்தனர்.
தயனேஸ் சிறுநீரகம் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. சம்பவத்தன்று தயனேஸ் வீட்டிற்கு பால் வாங்கி கொடுத்துவிட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அவர் அடிக்கடி உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றுவிடுவார் என்பதால் தயனேஸை யாரும் தேடவில்லை.
இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி முதல் வீட்டுக்கு வராததால் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் வளர்ப்பு மகன் அந்தோணிராஜன் இன்று புகார் கொடுத்தார்.
காவல் துறையினர் எரிந்துகிடந்தவரின் லுங்கி, காலணியை அவரிடம் காட்டினர். இதனையடுத்து இறந்து கிடந்தவர் வளர்ப்புத் தந்தை என்று அந்தோணிராஜன், தாயார் மரிய கிரேஸ் இருவரும் அடையாளம் கண்டு உறுதிபடுத்தினர்.
இந்த வழக்கு குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.