கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன், காய்ச்சலால் அகஸ்தீஸ்வரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவருக்குப் பெயர் தெரியாத காய்ச்சல் தீவிரமாக இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம், புதன்கிழமை மதியம் சுமார் 2.30 மணியளவில் நாகர்கோவிலிலுள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆசாரிப்பள்ளம் செல்லும் வழியில் ஈத்தங்காடு அருகே எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸின் கியர் ராடு உடைந்து, ஆம்புலன்ஸ் பாதி வழியில் நின்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும்; அதனை சரிசெய்ய முடியாததால் நாகர்கோவிலிலிருந்து வேறு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் வருவதற்கு சுமார் அரை மணிநேரம் ஆனதால், காய்ச்சலால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் ஆம்புலன்ஸிலேயே காத்துக்கிடக்க வேண்டிய அவலமான சூழல் ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் வந்ததும் நடுரோட்டில் அந்த சிறுவனை வேறு ஆம்புலன்ஸுக்கு மாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் ஏற்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் மனித உயிர்கள் மீது அலட்சியம் காட்டாமல் சம்பந்தப்பட்ட துறையினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தலையில்லாத' காங்கிரஸ் கட்சி: சீமான் விமர்சனம்!