கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பொட்டல் குளம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதன் அருகில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டுவந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஒகி புயலால் அங்கன்வாடி மையத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன. அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை மிகவும் சிதிலமடைந்ததால் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருகிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஒரு வகுப்பு ஒதுக்கி அங்கு தற்போது அங்கன்வாடி மையம் செயல்பட்டுவருகிறது.
இதில் தற்போது 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு சத்துணவும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அங்கன்வாடி மையம் நடுநிலைப்பள்ளியில் இயங்கிவருவதால் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிதிலமடைந்த அங்கன்வாடி மையத்தை மீண்டும் சரிசெய்யுமாறு பலமுறை அரசு அலுவலர்களிடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்டநிர்வாகம் உடனடியாக அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டும் என்று ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.