உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படும் பலசரக்கு, பால், இறைச்சி உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளன. அதேபோல அரசு டாஸ்மாக் கடையும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மதுபானம் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள இளங்கடைப் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. கடந்த மார்ச் 26ஆம் தேதி இந்தக் கடையை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், அதிலிருந்த சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த மதுபானங்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மதுபானங்களை கொள்ளையடித்தது கீழ சரக்கல்விளையைச் சேர்ந்த மகேஸ்வரன், இளங்கடையைச் சேர்ந்த கண்ணன் ஆகிய இருவர் எனத் தெரிந்தது. அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் கொள்ளையடித்தது எப்படி, கொள்ளையடித்த மதுபானங்களை எங்கே பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய ரமேஷ் என்ற இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நிலத்தில் புதைத்து வைத்து மது விற்பனை: தோண்டி எடுத்த காவல் துறை!