தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணியின் அரசியல் பயிலரங்கம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், "காலம் வலிமையானது. இரவும் பகலும் வந்துகொண்டே இருக்கும். அந்தவகையில் எடப்பாடி ஆட்சியின் நான்காண்டு என்பது சாதனை இல்லை, தோல்வி தான். மத்திய அரசு கொண்டு வந்த நீட் உள்ளிட்ட திட்டங்களை எதிர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. மத்திய அரசிடமிருந்து பெரும் சிறப்பு நிதியை பெற முடியவில்லை.
மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டிய பங்குத்தொகை 12 ஆயிரம் கோடி ரூபாய்யை பெற முடியவில்லை. சுய மரியாதையே சுத்தமாக இல்லாத அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க அஞ்சுகிறார்கள். கடன் சுமை மக்களால் ஏற்படவில்லை அரசின் செயல்பாட்டால்தான் ஏற்படுகிறது.
நிதி வருவாய் பற்றாக்குறை 25 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த நிலையில் புது திட்டங்கள் அறிவிக்கிறார்கள். 25 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை வைத்துக்கொண்டு எடப்பாடி அரசு நல்லாட்சி தருகிறார் என மோடி அரசு அல்ல யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.