தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டந்தோறும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, முதலமைச்சர் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி ஆய்வு செய்யவிருந்த நிலையில், பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டம் காரணமாக அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல அக்டோபர் 13 ஆம் தேதி குமரி வருவதாக இருந்த திட்டமும், முதலமைச்சரின் தாயார் மறைவு காரணமாக, 2ஆவது முறையாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், வரும் 10ஆம் தேதி குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ளச் செய்தி குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வரும் 10ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.
அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் அவர், அன்று பிற்பகல் 3 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில், முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், கரோனா தொற்றுநோய் தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், மறுநாள் (11ம் தேதி) காலை தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திரையரங்கு திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு