கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ஆண்டுதோறும் கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்துவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ள நீச்சல் பயிற்சி வகுப்பில் ஆறு வயது சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஏராளமனோர் கலந்து கொண்டுள்ளனர்.
சிறு வயதினருக்கு தனியாக அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான நீச்சல் குளத்தில் பிரத்யேக நீச்சல் ஆசிரியரைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் நீச்சல் வீரர்களுக்கும் இங்கு தனி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று தேசிய போட்டிக்கு தேர்வு பெற்றவர்களும் இங்கு தேசிய போட்டிக்கான சிறப்பு பயிற்சி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.