கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவ்வப்போது பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக வந்து செல்வது வழக்கம்.
ஆனால், மனு கொடுக்க வருபவர்களில் சிலர் தங்கள் பிரச்னையின் காரணமாக திடீரென தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிற வாசல்கள் மூடப்பட்டு முன்வாசல் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பகல் நேரம் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மனு கொடுக்க வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பின்னரே அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மண்ணெண்ணெயுடன் பிடிபட்ட வயதுமுதிர்ந்த தம்பதியினர்
அவ்வாறு நேற்று (ஜூலை 17) மனு கொடுக்க வந்த வயதான தம்பதியரை அலுவலக வளாகத்தில் அனுமதித்த நிலையில், அவர்கள் பையில் மறைத்து வைத்துக் கொண்டுவந்த மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி தீக்குளிக்க முயற்சித்தனர்.
இதனை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, அவர்கள் வைத்திருந்த மண்ணெண்ணெயைப் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில், அவர்கள் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த மருதப்பன், சரஸ்வதி தம்பதியர் எனத் தெரியவந்தது.
மருமகளால் வயது முதிர்ந்த தம்பதிக்கு ஏற்பட்ட நிலை
மேலும் அவர்களது இரண்டாவது மகன் ஐயப்பன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்னை காரணமாக, தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மனைவியும், மகனும் இவர்களது வீட்டில் தங்கியதோடு, இவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதாக கூறினர்.
இதுகுறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் விசாரணை எதுவும் மேற்கொள்ளாததால், மருமகள் எஸ்தரும் அவரது மகன் டொனால்ட் ஹெல்சிங்கும், தொடர்ந்து அவர்களை துன்புறுத்தி வருவதாகத் தெரிவித்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த வயதான தம்பதியினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்களை மீட்ட காவல் துறையினர், அவர்களது புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறி, இருவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நெல் மூட்டைகளை பெற்று ரூ. 53 லட்சம் மோசடி செய்தவர் கைது