ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் விவசாயத்தை அடியோடு அழித்துவிட்டு தற்போது இந்தியா நோக்கி படையெடுப்பை தொடங்கியுள்ள வெட்டுக்கிளி, வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கி தற்போது தமிழ்நாட்டிலும் விவசாய நிலங்களை குறிவைக்க ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீயன்னூர் அருகே வெட்டுக்குழி முளவிளை பகுதியில் தாமஸ் அபிரகாம் என்பவரது ரப்பர் தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் காணப்பட்டன. தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, ரப்பர் பயிர்களை அழிக்க தொடங்கியுள்ளன.
இதனால் கன்னியாகுமரி விவசாயிகள் மிகவும் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோதங்கராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'மத்திய மாநில அரசுகள் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்ததைத்போல் வெட்டுக்கிளி பிரச்னையிலும் தோல்வியடைந்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடாது. தற்போது வட இந்தியாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தொடங்கியுள்ள நிலையில், இதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் வெட்டுகிளி படையெடுப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு அலுவலரை கொண்டு குழு அமைக்கபட வேண்டும். அந்தக் குழுவில் மக்கள் பிரதிநிதிகளும் விவசாய பிரதிநிதிகளும் இடம்பெறச் செய்ய வேண்டும்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க... வெட்டுக்கிளிகளை கொல்வதால் நீண்ட கால பாதிப்பு!