கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் மதுபான பாரில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் செயல்பட்டு வந்த நாஞ்சில் மனமகிழ் மன்றம் என்ற தனியார் மதுபான பாரில் அதிகாலை முதலே மது விற்பனை செய்வதாகவும், போலி மது விற்பனை செய்வதாகவும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தியபோது திருட்டுத் தனமாக பதுக்கி வைத்திருந்த 150க்கும் மேற்பட்ட மதுபாட்டில் பெட்டிகள், சிகரெட் பண்டல்கள் சுமார் 4,25,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பத்திற்கும் மேற்பட்ட பார் ஊழியர்களையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மதுபான பாரில் அரசு அனுமதித்த நேரங்களை விடவும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக நேரம் செயல்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று நடவடிக்கை எடுத்திருப்பதாக காவல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.