குமரி மாவட்டம் மயிலாடி அடுத்த மருங்கூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 27ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 2ஆம் தேதி சூரசம்ஹாரம் நடந்தது.
இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. இதற்காக மருங்கூரிலிருந்து வெள்ளி குதிரையில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். சுவாமி ஊர்வலம் வந்த வழி நெடுகிலும் உள்ள பக்தர்கள் சுவாமிக்கு வரவேற்பு கொடுத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி மயிலாடி வந்தடைந்தார். இதனையடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடியிலுள்ள நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாயில் அமைந்துள்ள ஆராட்டு மடத்தில் வைத்து ஆராட்டு வைபவம் நடைபெற்றது.
பின்னர், சுவாமிக்கு பால், இளநீர், தேன் மற்றும் வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து சுவாமி தீர்த்தவாரி முடிந்து அலங்கார வெள்ளி குதிரையில் மீண்டும் மருங்கூர் சென்றடைந்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருத்தணி முருகர் கோவில் - ரூ.72 லட்சம் உண்டியல் காணிக்கை