குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 10 மாணவிகள் இன்று (பிப். 01) மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவிகள் கூறுகையில், “தனியார் பொறியியல் கல்லூரி முறையான அனுமதி இல்லாமல் இயங்கிவருவது எங்களுக்குத் தெரியவந்தது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தோம். அவர்கள் பேச்சுவார்த்தையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கல்லூரி முன்பு இரவு வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்.
பின்னர் அங்கு வந்த வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி எங்களை அனுப்பிவைத்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து சென்னை சென்று இணை இயக்குநரிடம் முறையிட்டோம். அவர் உங்களை அரசுக் கல்லூரிக்கு மாற்றித் தருகிறோம் என்றும், தனியார் கல்லூரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்களது கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. எனவே உடனடியாக கல்லூரியை மூட நடவடிக்கை எடுப்பதுடன், எங்களை அரசு கல்லூரிக்கு மாற்ற வேண்டும். மேலும் பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி நிர்வாகி ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இங்கிருந்து போக மாட்டோம்” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் மின்சாரம்: விவசாயிகள் மகிழ்ச்சி!