வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரத்திலிருந்து நீரோடி வரையிலான 46 மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
ஆழ்கடலில் மீன்பிடித்து வந்த விசைப்படகுகள் வேகமாக கரை திரும்பி வருகின்றன. கரைமடி பகுதிகளில் மீன் பிடிக்கும் வள்ளம், பைபர் உட்பட நாட்டுப் படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டன. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் படகுகள் அனைத்தும் மீன்பிடித் தங்கு தளங்களில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.