கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக சொத்துக்களை வனத்துறைக்கு ஒப்படைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், அவர்கள் அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், "கன்னியாகுமரி மாவட்டம் எவ்வித குறிப்பிடத்தகுந்த தொழில்களும் இல்லாத மாவட்டமாகும். இந்நிலையில், பொதுமக்களின் பல்வேறு கட்ட போராட்டத்திற்குப் பிறகு 5 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் அரசு ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டு ரப்பர் உற்பத்தியில் அதை சார்ந்த பணிகளும் தொடங்கப்பட்டன.
இதன்மூலம் தொடக்கத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் வேலை பெற்றனர். பின்னர், அரசு ரப்பர் தோட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு ரப்பர் கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான 2500 ஏக்கர் பரப்பளவு சொத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க ரப்பர் கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் அரசு ரப்பர் கழக நிறுவனம் படிப்படியாக மூடப்படும் நிலை ஏற்படுவதுடன் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும். எனவே, வனத்துறைக்கு ஒப்படைக்க திட்டமிட்டுள்ள 2500 ஏக்கர் நிலத்தில் மீண்டும் ரப்பர் கழகம் திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.