கன்னியாகுமரி: இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவையொட்டி, கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பு தத்துருவமாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று (டிச.25) கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு ஜெபவழிபாடு, கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, குமரியில் உள்ள கேட்டா வரம் தரும் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில், கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டு, குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அமைந்து, சாதி, சமய, இனம், மொழி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் வந்து வழிபட்டு செல்லும் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில், நேற்று இரவு 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைப்பெற்றது. இதில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலியில் ஏராளமான மக்கள் குடும்பமாக வருகை தந்து சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலி நிகழ்சிகள் நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நகரின் பல்வேறு வீடுகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் மரங்கள் வீடுகளுக்குள் அமைக்கப்பட்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சாலைகள், மற்றும் தேவாலயங்கள் முழுவதுமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
இந்நிகழ்ச்சியில், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், கிறிஸ்மஸ் பாடல்கள் பாடும் குழுவினர், இசை கருவிகளுடன் வீடு வீடாக சென்று கிறிஸ்மஸ் பாடல்களை பாடி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்..தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை