இலங்கையில் இருந்து வந்தவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்தியக் குடியுரிமை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த சூழலில், இலங்கையிலிருந்து வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல், அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைப்பதற்கு வேண்டிய அனைத்து வழிவகைகளையும் மாநில,மத்திய அரசுகள் எடுப்பதற்கு வழி மொழிந்தது.
இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட முகாம்களில் உள்ள இலங்கை வாழ் தமிழர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு இலங்கை அகதிகள் முகாம்களை சேர்ந்த இலங்கை வாழ் தமிழர்கள், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே தாங்கள் வசிக்க விரும்புவதாகக் கூறி இந்தியக் குடியுரிமை வழங்கும்படி கோரிக்கை மனு அளித்தனர்.