கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பினர், ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் மீன்வர்களை மீட்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடி வேலைக்காக அமர்த்தப்பட்டார்கள். இந்நிலையில், சீனாவை தொடர்ந்து ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் பாதிக்கத் தொடங்கியது. இதனால், மீனவர்கள் அனைவரும் தங்களை வைரஸ் தாக்கும் முன் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும்.
மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தோம். தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியால் மத்திய அரசு மீனவர்களை மீட்க கப்பல் அனுப்ப முன்வந்துள்ளது.
இந்நிலையில், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் கப்பல் பயணத்திற்கு மீனவர்கள் தலா 8 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், மீனவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கப்பல் புறப்படும் இடத்திற்கு சொந்த செலவில் வரவேண்டும், விசா ரத்து செய்வதற்கான செலவை மீனவர்கள் ஏற்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
மீனவர்கள் கடந்த மூன்று நான்கு மாதமாக மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்துவரும் நிலையில் அவர்களிடம் பத்தாயிரம் பணம் கேட்பது ஏற்புடையது அல்ல. எனவே தமிழ்நாடு மீனவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் கப்பல் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வறுமையில் வாடும் 3500 மீனவக் குடும்பங்கள் - கண்டுகொள்ளுமா அரசு?