கன்னியாகுமரி: அருமனை அருகே குழிச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அவரது மனைவி லதாபுஷ்பம் இவர்களுக்கு புக்லீன் ரிக்ஸி (22) மற்றும் அக்லீன் ரகுல் (20) என்ற இருபிள்ளைகள் உள்ளனர் . ராஜ்குமார் மனைவி லதா புஷ்பம் 2012ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டார் .
பின்னர் ராஜ்குமார் வெளிநாட்டிற்க்கு (யூஏஇ) வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில், 2020 ம் ஆண்டு மே மாதம் யூஏஇ, அல்ஐ னில் கோவிட் காரணமாக ராஜ் குமார் மரணம் அடைந்தார் .கோவிட் 19 நெறிமுறையின் படி இறந்த உடலை வீட்டிற்கு கொண்டு வர முடியாது எனவும், மேலும் வெளிநாட்டில் இருந்து இறந்தவர் உடலை தாயகம் கொண்டு வருவதற்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது
எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தகனம் செய்யப்பட்டது பின்னர் தகனம் செய்யப்பட்ட அஸ்தியை அஜ்மானில் உள்ள கலீஃபா மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டது.
தந்தையை கடைசியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காத அவரது இரண்டு பிள்ளைகளான புக்லீன் ரிக்ஸி (22) மற்றும் அக்லீன் ரகுல் (20) , அவரது அஸ்தியை சொந்த ஊருக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் செய்து உள்ளனர் .பின்பு தங்களது துயரத்தை பற்றி வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்து உதவியை நாடி உள்ளனர்.
இந்நிலையில், கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த சிஜோ என்பவருக்கு, இந்த பிள்ளைகளின் விருப்பம் பற்றி வாட்ஸ்அப் குரூப்பின் மூலமாக தெரிய வந்தது. அனாதை ஆசிரமத்தில் படித்து வளர்ந்த சிஜோவுக்கு தாயையும் பிறகு தந்தையையும் இழந்த குழந்தைகளின் துயரத்தைப் புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு உதவிட முன்வந்துள்ளார்.
தகனம் செய்யப்பட்ட ராஜ்குமார் அஸ்தியை மருத்துவமனையில் இருந்து ஆவணங்களுடன் பெற்று துபாயில் உள்ள தனது இல்லத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைக்குத் தெரியாமல் அஸ்தியை வைத்து விட்டு ராஜ்குமாரின் பிள்ளைகளுக்கு தகவலும் கொடுத்து உள்ளார் .
இதற்கிடையில், கோவிட் நெருக்கடியால் அவர் ஒரு வருடமாக வேலையை இழந்தார். இந்தியாவிற்கு செல்லும் பல்வேறு உறவினர்களிடம் தகனம் செய்யப்பட்ட அஸ்தியை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் பல காரணங்களை கூறி யாரும் அஸ்தியை இந்தியா கொண்டுவர முன்வரவில்லை . மேலும், இந்தியா கொண்டு செல்ல பல்வேறு சட்ட சிக்கல் ஏற்பட்டும் உள்ளது. மறைந்த ராஜ் குமாரின் குழந்தைகள் தினமும் சிஜோவை தொடர்பு கொண்டு தங்கள் தந்தையின் நினைவுகள் அடங்கிய பெட்டி பத்திரமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொண்ட சிஜோ வாட்சப் குழுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவேற்றம் செய்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து , கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த துபாயில் மருத்துவ துறையில் பணிபுரிந்து வருபவரும் சமூக சேவகியுமான தாஹிரா என்ற இளம்பெண் அந்தப் அஸ்தியை பிள்ளைகளிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொள்ள முன்வந்துள்ளார்.
அதற்காக எம்பசி மூலம் மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு பல நாட்கள் கடும் முயற்சிக்கு பின்னர்
தாஹிரா விமானத்தில் திருவனந்தபுரம் வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே குழிச்சல் கிராமத்திற்கு வந்து ராஜ் குமாரின் பிள்ளைகள்களிடம் அங்கியினை ஒப்படைத்தார்.
அஸ்தியை கைமாற்றம் செய்யும் போது தாஹிரா வின் கண்கள் கண்ணீரில் நனைவதும் பார்க்க முடிந்தது . பிள்ளைகளும் தன் தந்தையின் அஸ்தியை கையில் வாங்கும் பொழுது கண்கலங்கி பெற்றுக் கொண்டனர் . ஏற்கனவே ராஜ் குமாரின் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் வீட்டில் கல்லறை தயார் செய்து வைத்திருந்தனர்.
அஸ்தியை பெற்று கொண்ட ராஜ்குமாரின் குழந்தைகள் தங்களின் ஆசை போல் கல்லறையில் புதைத்து பிரார்த்தனை செய்து சடங்குகளை செய்தனர் . மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு தேவதை போல் பறந்து வந்து வேலைப்பளு காரணமாக நேரம் இல்லாததால் சொந்த ஊரான கோழிக்கோடு சென்று உறவினர்களை பார்க்காமல் மீண்டும் துபாய் திரும்பி சென்றார் தாஹிரா.