இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி, மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட சர்வதேச சுற்றுலாத் தலமாகும். வட இந்தியா, கேரளா உள்பட நாட்டின் பிற பகுதிகளுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரில் 80 விழுக்காட்டினர், கன்னியாகுமரி வந்து செல்வது வழக்கம்.
அதன்படி, கன்னியாகுமரியில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், கோடை விடுமுறை காலங்களான ஏப்ரல், மே மாதங்கள், சபரிமலை சீசன் காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை தினங்களில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும், உள்ளூரில் இருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இதனால் எப்போதும் திருவிழா போல் கன்னியாகுமரி இருக்கும்.

இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் குமரி கடற்கரையானது மக்கள் ஆரவாரமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளை நம்பி கடை வைத்திருந்த சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல சுற்றுலாப் பயணிகளை புகைப்படம் எடுத்து பிழைப்பு நடத்திய புகைப்படக் கலைஞர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் போன்றவர்களும் வாழ்விழந்துள்ளனர்.
இது குறித்து குமரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வந்த மணிகண்டன் கூறியதாவது, ”நான் பல ஆண்டு காலமாக கன்னியாகுமரியில் புகைப்பட கலைஞராக உள்ளேன். சுற்றுலாப் பயணிகளை நம்பி மட்டுமே தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு இதை தவிர வேறு தொழில் தெரியாது. கரோனா காரணமாக வாழ்க்கையில் இதுவரை காணாத பேரிழப்பை அடைந்துள்ளோம். சுற்றுலாப் பயணிகள் வராததால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகிறோம். எனவே, புகைப்படக் கலைஞர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக கன்னியாகுமரி வியாபாரிகள் சங்க செயலாளர் மணி கூறுகையில், “கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது . இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால் இப்பகுதியில் கடை வைத்திருக்கும் சிறு, குறு வியாபாரிகள் கடன் பெற்று பொருள்களை வாங்கி வைத்துள்ளனர். ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக கடைகளைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அரசு எங்களுக்கு வேறு வழிகளில் உதவி செய்யாவிட்டாலும், எங்கள் கடைகளுக்கான ஆறு மாத வாடகை, மின்சார கட்டணம் வசூலிக்காமல் இருந்தாலே போதும்” என்றார்.

ஒரு காலத்தில் ஆண்டிற்கு 10 லட்சத்திற்கு மேல் சுற்றுலாப் பயணிகள் குவிந்த கன்னியாகுமரி, தற்போது ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் நடத்திய பலர் வாழ்விழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர். இவர்களின் வாழ்வில் மீண்டும் புது வெளிச்சம் தோன்றி, வசந்தம் வீச தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: 'குற்றால சீசனை நம்பி தான் வாழ்கிறோம்'- வியாபாரிகள் உருக்கம்!