தமிழ்நாடு முழுவதும் டெங்கு நோய் பாதிப்பை ஏற்படுத்தியபோது, அதனைத் தடுக்க முடியாமல் ஆங்கில மருத்துவம் திணறியது. அப்போது நமது பாரம்பரியமான சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்பட்ட நிலவேம்பு கசாயம் கை கொடுத்தது. டெங்கு நோயும் சீராக குணமானது.
அதேபோல தற்போது உலகம் முழுவதும் கரோனா நோயால் மக்கள் அனைவரும் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த நோய்க்கான மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாததால், மக்கள் உயிர் பயத்தில் வாழ்ந்துவருகின்றனர்.
இச்சூழலில், நாகர்கோவிலில் கரோனா நோயை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் மனித உடலில் வெள்ளை அணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும் வகையில் சித்தார்த்தை, அதிமதுரம், வெற்றிலை, நல்லமிளகு ஆகியவற்றை கொண்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ கசாயம் தயாரிக்கப்பட்டது.
நாகர்கோவிலில் கோயில் பூசாரிகளால் தயார் செய்யப்பட்ட இந்த கசாயம், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள வேட்டாளி அம்மன் கோயிலில் வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதில், இஸ்லாமிய கல்வி அறகட்டளை தலைவர் முஹம்மத் ஹபீப் கசாயம் வழங்கும் பணிகளை தொடங்கிவைத்தார். இதனை ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி பருகிச் சென்றனர்.