கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் நடந்த அன்று இரவு, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்ர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், களியக்காவிளை பகுதி வழியாக இரண்டுபேர் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
அந்த பதிவுகளை வைத்து, குற்றவாளிகள் தெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோர் கொலை செய்ததாகத் தகவல் வெளியிட்டனர். குற்றவாளிகள் இருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பதுங்கியிருப்பதாகக் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுதிது உடுப்பி ரயில் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி தவுபீக்(28), அப்துல் சமீம்(32) ஆகியோரை தமிழ்நாடு-கேரள காவலர்கள் கைது செய்தனர்.
பின்னர் குற்றவாளிகள் இருவரையும் கொலை நடந்த இடத்தில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்து, கர்நாடகாவிலிருந்து இரண்டு குற்றவாளிகளும் குமரி மாவட்டத்திற்கு இன்று அதிகாலை அழைத்துவரப்பட்டனர்.
பின்னர் குற்றவாளிகள் இருவரும் காலை 10 மணிக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்படஉள்ளனர் என காவல்துறை தகவல் வெளியிட்டது. இந்த நிலையில், இன்று காலை இரண்டு தீவிரவாதிகளையும் கொலைச் சம்பவம் நடந்த களியக்காவிளைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் தக்கலை காவல் நிலையத்துக்குக் அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்வரை அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
கைதான இருவரும் தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தனர். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தக்கலை காவல் நிலையம், குழித்துறை நீதிமன்றம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் காவல் நிலையத்தில் தீவிரவாதிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதால், அங்கு, கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு